தொண்டர்களை ரசிகர்களாக்கி வைப்பதன் விளைவு இது,தொண்டன் தலைமை என்ன நினைக்கும் என்பதை தலைமை முன்வைக்கும் முன்னரே உள்வாங்கி நிற்பான், ரசிகன் தான் நினைப்பதைத் தலைமை செய்யவேண்டுமென்று நினைப்பான் அதற்கு மாற்றாய் தலைமை முடிவெடுக்கும் நிலையில் முனங்கிக்கொண்டே தலைமைக்கு கட்டுப்பட்டு நிற்பான். அதேசமயம் தான் நினைத்ததை வெளிக்காட்டியவனைக் அது கட்சிக்கும், தலைமைக்கும் பாதகமானதாய் அமைந்தாலும்கூட அவனைக் கொண்டாடிக்கொண்டும், அதற்கு மாற்றாய் கருத்திடுவோரைத் தூற்றிக்கொண்டும் இருப்பான்.
முப்பதாண்டுகளாய் பல்வேறு போராட்டங்களை மாநாடுகளை நடத்தியும்,கட்சி தாண்டியும்கூட பல்வேறு நலன்விரும்பிகளின் நிதிப்பங்களிப்பிலும் வளர்ந்த ஒரு இயக்கத்தில் கேவலம் ஆறு மாதத்துக்கு முன்பாய் உள்ளே வந்த நபர்தான் மாநாடுகளை ஒருங்கிணைக்கிறார்,நிதி ஆதாரமாய் இருக்கிறார் என்று அவராலேயே தூண்டிவிடப்பட்டு பரப்பப்படுவதை ஒருவருக்கும் கேள்வியெழுப்பத் தோன்றவில்லை என்பதே அநியாயம். அவரை வெளியேற்றியதற்கு எதிர்க்குரலையும், ஆதங்கத்தையும் தெரிவிப்பது எவ்வகையில் உத்தமம்?
எழுச்சித்தமிழரின் கரத்தை வலுவாக்க தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்த எத்தனையோ இரண்டாம் கட்டத்தலைவர்கள் கட்சியில் இருக்கின்றனர். அவர்கள் எழுச்சித்தமிழர் எண்ணுவதை முன்கூட்டியே தீர்மானிக்க கூடியவர்கள், ஒத்த அலைவரிசையில் பயணிப்பவர்கள். ஆனால் தங்களுக்கு எழுச்சித்தமிழரால் வழங்கப்படும் சுதந்திரத்தை மீறாதவர்கள், தலைவனின் சொல்லுக்கு கட்டுப்படுபவர்கள். அத்தகையோர் தான் கட்சியின் இரண்டாம் நிலைதூண்கள். அப்படியில்லாமால் கட்சியில் வழங்கப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் எனும் பொறுப்பின் தன்மையை உணராமால் “கார்ப்ரேட் நிர்வாகியாக"வே உலவிய அர்ஜீன் எப்படி நம்முடன் இருக்க முடியும்? இரண்டாம்கட்ட தலைவராக நீடிக்கமுடியும்? எழுச்சித்தமிழரின் தம்பியாக முடியும்? முடியாது..
"விசிலடிச்சான் குஞ்சுகளாக" அலையும் சிறுபிள்ளைகள் தான் ஆதவின் நீக்கத்திற்கு குமைந்து கொண்டிருக்கின்றனர்,அவர்கள் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுபவர்கள். எழுச்சித்தமிழரின் தம்பிகளாக,சிறுத்தைகளாக சீறும் எவரும் அவர் வார்த்தையையோ, செயல்பாட்டையோ விமர்சிக்ககூட மாட்டார்கள்..ஏனெனில்,
எழுச்சித்தமிழர் நம் அனைவரின் "தாயுமானவர்". அவருக்குத் தெரியும் தன் குழந்தைகளுக்கு எப்போது என்னசெய்ய வேண்டுமென்று.
ஆதவ் வெளியேற வேண்டுமா?
ஆதவ் விசிகவுக்கு பொருளாதார உதவிகள் செய்கிறார் என்ற போலித்தோற்றம் உருவாகி வருகிறது. கட்சி தொடங்கி 30 வருடமாக இவர் பணம் கொடுத்துதான் வளர்ந்ததா? விசிக போன்ற ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு ஆனால் அதற்கான இடமும் நேரமும் முக்கியமானவை...
தேர்தலை சந்திக்கும் கட்சிக்கும், சமூக இயக்கங்களுக்கும் வேறுபாடு அதிகம். எடுத்தோம் கவிழ்த்தோம் என தேர்தல் கூட்டணிகளை உடைப்பதும், மனம்போன போக்கில் கட்சியின் மூத்த பொறுப்பாளர் பேசுவதும் கட்சியின் மீதான நம்பிக்கையை குறைக்கும். பாமக இன்றிருக்கும் நிலைக்கு கூட்டணி தர்மத்தில் அவர்களின் நம்பிக்கையற்ற தன்மையும் ஒரு காரணம். விசிகவின் தொண்டர்கள் விடுதலை நெருப்பை நெஞ்சில் சுமந்துகொண்டு தமக்கான விடுதலை விடிவெள்ளி எழுச்சித்தமிழரே என எத்தனை நெருக்கடி வந்தாலும் அண்ணனின் பின்னால் அணிவகுப்பவர்கள். அவர்களுக்கான நம்பிக்கையான தலைவராகவும், கூட்டணியில் நம்பகமானவராகவும் பார்க்கப்படும் தலைவரின் பெயரை கெடுப்பதுபோல நடந்துவிட்டர் ஆதவ்..
மேலும் வீடியோக்களை பார்க்க:https://www.thanimaipayanam.in/2024/11/blog-post_26.html
கட்சியா? தனிநபரா? எனும்போது கட்சியே பிரதானம். ஒவ்வொரு தொண்டனின் வியர்வையில் வளர்ந்த கட்சியை ஒரு தனிமனிதனுக்காக காவு கொடுப்பது ஏற்பல்ல. தனக்கு வழங்கப்பட்ட உரிமையை தவறாக பயன்படுத்தி, தன் எதிரியன திமுக கூட்டணியை உடைக்க விசிகவை பகடைக்காயாக பயன்படுத்தும்போது தயங்காமால் ஆதவ் அர்ஜீனை தூக்கி எறியலாம். அதைத்தான் எழுச்சித்தமிழர் செய்துள்ளார்.
விஜய் புத்தகவெளியீட்டில் கலந்துகொள்வது என் தலைவர் திருமாவுக்கு நெருக்கடி தரும் ஆதலால் விஜய்க்கு மாற்றாக வேறு நபரை அழைக்கலாம் என ஆதவ் கூறியிருந்தால் அவரை நாம் நம்பலாம். புத்தகமே அவரின் கம்பெனி வெளியீடு எனும்போது அதை யாரும் எதிர்க்கப்போவதில்லை அதைவிடுத்து விஜய் வந்தே ஆகவேண்டும் என அடம்பிடிப்பது அவரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. "வாய்ஸ் ஆப் காமன்" நிறுவனத்தின் தலைவராக பொதுவெளியில் என்ன பேசினாலும் கவலையில்லை ஆனால் விசிகவின் துணைப்பொதுச்செயலாளர் எனும்போது அவரின் பேச்சு கட்சியின் கருத்தாகவே பார்க்கப்படும். அதையுணர்ந்து அவரின் பேச்சு அமையவில்லை என்பதே பிரச்சினை.
ஊர்ஊராக, தெருதெருவாக 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணப்பட்டு மக்களை அமைப்பாக்க எழுச்சித்தமிழர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது. திடுமென விசிகவுக்கு வந்து தன்சொந்த லாபத்திற்காக ஆலமரமான கட்சியை குடைய முற்படும்போது வெட்டவேண்டியது "ஆணிவேரின்" கடமை. அதைத்தான் தலைவர் செய்துள்ளார். உதயநிதி மற்றும் சபரீசனுடனான தன் தொழில் பிரச்சினைகளுக்காக அவர்களை தோற்கடிக்கச் செய்ய விசிகவின் முகம் ஆதவுக்கு தேவை. அதைச்செய்ய "எடுத்தார் கைப்பிள்ளையாக" இருப்பார் என எழுச்சித்தமிழரை குறைவாக எடைபோட்டுவிட்டார் அர்ஜீன், அவர் விடுதலை நெருப்பு என்பதை அறியாமால்..
கட்சியில் தலைவரின் வார்த்தையே சாசனம்.அதற்கு கட்டுப்படுவதே ஒவ்வொருவரின் கடமை. சுயலாபத்துக்கு செயல்பட இது நிறுவனம் அல்ல, லட்சோப லட்ச தொண்டர்களின் ரத்தத்தில் வளர்ந்த கட்சி... சிந்தித்து பாருங்கள் ஆதவ், ஆறுமாத காலம் அதற்கான நல்ல இடைவெளி. முழுவதுமாக எழுச்சித்தமிழரை படித்துவிட்டு வாருங்கள் இல்லையெனில் சென்றுவாருங்கள்..
கோகுல்.