கடந்த அக்டோபர் 27, 2024 ஆம் நாளன்று விக்கிரவாண்டியில் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக மாநாடு அரசியல் நிகழ்வாக இருந்தாலும், அதில் பங்கெடுத்த விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்தது.
ஆட்சியமைப்பில் பங்கு பெறுவதே அடிப்படையான நோக்கமாக இருக்கும் என்பதற்கு மாறாக, மக்களை கவரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே அம்மாநாடு நடந்து முடிந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் என்ன என்று அறிவிக்கவில்லை. அத்துடன், திட்டமிடப்பட்ட செயல் புலனோ இல்லாமல் காணப்பட்ட அம்மாநாடு, ஒரு வெற்றிகரமான அரசியல் கூட்டமாக இல்லாமல் போய்விட்டது.
இந்தியாவில் பாஜக தான் பாசிசத்தின் அடையாளமாகக் கருதப்படும் போது, விஜய் தனது உரையில் அவர்கள் 'பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?' என்று சினிமா வசனம் போல் சனநாயக சக்திகளை கிண்டலடிக்கிறார். பாசிசம் என்றால் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவரது சமூக சிந்தனைகள் உள்ளது.
அவரது உரையில் சினிமா பாணியில் ஆவேசம் மட்டுமே இருந்தது.ஆனால் அதில் தெளிவான கொள்கை இல்லை என்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
பல அரசியல் தலைவர்களுக்கு பின்னால் பல முக்கியமான ஆளுமைகள் இருந்தனர். எம்ஜியார், வைகோ, விஜயகாந்த் போன்ற தலைவர்களின் பின்னால் இருந்த பல முக்கிய தலைவர்களை எடுக்துக்காட்டாக சொல்லலாம்.
ஆனால், இன்று விஜய்யின் பின்னால் யார் உள்ளார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது.
பக்கா பிளானோடு வந்திருக்கிறேன்' என்று விஜய் கூறியபோதும், அந்த பிளானின் முன்னோட்டம் அவரின் உரையில் எங்குமே இல்லை.
ஆகவே அவரது தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எந்த செயல்திட்டங்களையும் அவரால் , வழங்க முடியவில்லை.
ஒரு பெரும் கூட்டத்தை கூட்டி தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், உப்புச் சப்பில்லாமல் அரைத்த மாவையே மீண்டும் அரைத்து கூட்டத்தை கலைத்திருக்கிறார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று நாம் கண்டு உணர்வதற்கான வாய்ப்புகளை அம்மாநாடு தவறவிட்டது.
கு.கா.பாவலன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்